அதிமுகவை கைப்பற்றுவதில் சசிகலா தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். ஆனால் அதற்கான வாய்ப்புகள் அவருக்கு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் சசிகலா பாஜகவில் இணைந்தால் வரவேற்போம் என்று சட்டமன்ற பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது, சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக் கொள்ளவில்லை என்றால், அவர் பாஜகவில் இணைய விரும்பினால் நாங்கள் அவரை வரவேற்போம். அவருடைய வருகை பாஜக வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும், கட்சிக்கு உறுதுணையாக இருக்கும். இதற்கான முயற்சிகளை பாஜக எடுக்கும் என்று அவர் தெரிவித்திருந்தார்.
அதனை தொடர்ந்து சட்டமன்ற பாஜக தலைவர் கருத்து குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், யார் வேண்டுமானாலும் பாஜகவில் தாராளமாக இணையலாம். ஆனால் குறிப்பிட்ட சிலரை கட்சியில் சேர்ப்பது குறித்து பாஜக மேலிடம் தான் முடிவு எடுக்கும். அப்படியொரு முடிவு எடுக்கும் நேரம் வந்தால் மத்தியிலும், மாநிலத்திலும் கட்சியிலுள்ள சீனியர்களை கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். மேலும் இந்த விஷயத்தில் கட்சித் தலைவர் என்ற முறையில் தனது தனிப்பட்ட கருத்து ஒன்றும் கிடையாது. நயினார் நாகேந்திரன் கூறியது முற்றிலும் அவரது சொந்த கருத்து என்று அவர் தெரிவித்துள்ளார்.