ஒடுக்கப்பட்டோரின் மேம்பாட்டிற்காக பாடுபட்ட தியாகி இமானுவேல் சேகரனின் 65-வது நினைவுநாள் நேற்று அனுசகரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு பரமக்குடியில் உள்ள தியாகி இமானுவேல் சேகரனின் நினைவிடத்தில் அரசியல் கட்சி தலைவர்கள், ஊர்பொதுமக்கள் என பலர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், மூத்த நிர்வாகிகள் ஆகியோர் மலர்வளையம் வைத்து இமானுவேல் சேகரனின் தியாகத்தை நினைவு கூர்ந்தனர்.
மேலும் பா.ஜ.க சார்பில் மாநில துணைத்தலைவா் நயினாா் நாகேந்திரன், மாநில பொதுச்செயலாளா் பொன்.பாலகணபதி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் மாணிக்கம், முன்னாள் எம்.பி. சசிகலாபுஷ்பா, மாநிலச் செயலாளா் அஸ்வத்தாமன் போன்றோர் மலர் வளையம் வைத்து அஞ்சலிசெலுத்தினர். இந்நிலையில் கூட்டம் அலைமோதியதால் அந்த இடத்தில் நெரிசலாக இருந்தது. அப்போது இக்கூட்டத்திற்கு நடுவில் முன்னாள் எம்பி-யும், பா.ஜ.க மாநில துணை தலைவருமான சசிகலாபுஷ்பா அஞ்சலி செலுத்த வந்தார்.
அவருக்கு பின்னால் மாநில பொதுச் செயலாளர் பொன்.பால கணபதியும் வந்தார். அப்போது அவர் அஞ்சலி செலுத்துவதில் கவனம் செலுத்தாமல் தங்களது கட்சியின் மூத்த நிர்வாகியும், முன்னாள் எம்பி-யுமான சசிகலாபுஷ்பாவை சங்கடத்துக்குள்ளாக்குவதிலேய குறியாக இருந்தார். பொது வெளியில் கூட்டம் அதிகம் உள்ள இடத்தில் தியாகிக்கு அஞ்சலி செலுத்தாமல், சித்து விளையாட்டை அரங்கேற்றுவதற்காக அங்கும் இங்கும் வேண்டும் என்றே நகர்வது போல் அவர் நடித்துக் கொண்டிருந்தார்.
இதன் காரணமாக சங்கடம் ஏற்பட்டாலும் சசிகலாபுஷ்பா அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்தார். இவ்வாறு பொன்.பால கணபதியின் முகம்சுழிக்க வைக்கும் இச்செயலை வீடியோவாக பதிவு செய்த சிலர் சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். அதை பார்த்த பலரும் பா.ஜ.க-வின் மாநில பொதுச் செயலாளர் பொன். பாலகணபதிக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.