நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்த நிலையில் சசிகலாவையும், டி.டி.வி.தினகரனையும் மீண்டும் இணைத்து கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று தேனி மாவட்ட கட்சி நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடம் அளித்து உள்ளனர். இவ்விவகாரம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் போன்றோர் பெரியகுளம் அருகேயுள்ள கைலாசப்பட்டியில் அமைந்துள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் பண்ணை வீட்டிற்கு வந்து அவரை சந்தித்து 3 மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்திவிட்டுச் சென்றனர்.
இந்நிலையில் இன்று (மார்ச்.5) ஓ.பன்னீர்செல்வத்தை அவரது பண்ணை வீட்டில் சந்திப்பதற்காக முன்னாள் உணவுத்துறை அமைச்சரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான புத்திச்சந்திரன் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் செல்லப்பாண்டியன் போன்றோர் நீண்ட நேரம் காத்திருந்தனர். இதையடுத்து அவர்களை பெரியகுளத்தில் உள்ள தனது இல்லத்திற்கு வரவழைத்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களை சந்தித்து நீண்ட நேரம் ஆலோசனையில் ஈடுபட்டார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது, சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரனை அதிமுக-வில் விரைவில் இணைக்க வேண்டும் என ஒருங்கிணைப்பாளரை நேரில் சந்தித்து வலியுறுத்தினோம்” என தெரிவித்தனர்.