அதிமுகவில் இபிஎஸ்-ஓபிஎஸ் இணைப்பிற்கு பின்னர் சசிகலா தினகரன் உள்ளிட்டோர் முழுவதுமாக கட்சியிலிருந்து ஓரம் கட்டி வைக்கப்பட்டனர். இதன் பின்னர் தினகரன் ஆர்.கே நகர் தொகுதியில் குக்கர் சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனையடுத்து சசிகலா சிறையில் இருந்து வந்தவுடன் அவர் தனக்கு ஆதரவு அளிப்பார் என தினகரன் பெரிய அளவில் எதிர்பார்த்து இருந்தார். ஆனால் சசிகலாவோ நான் பொது வாழ்க்கையில் இருந்து ஒரேடியாக விலகிக் கொள்கிறேன் என அறிவித்திருந்தார். இதனால் தினகரனின் எதிர்பார்ப்பு சுக்கு நூறானது. ஏற்கனவே நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை அமமுக ஒரு கணிசமான இடங்களை கைப்பற்றி தன் வலிமையை காட்டியது.
தற்போது பிப்ரவரி 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது இந்த தேர்தலில் தனக்கு ஆதரவு அளிக்குமாறு தினகரன் சசிகலாவிடம் கேட்டுள்ளார். அதற்கு சசிகலா மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து டிடிவி தினகரன் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி பல முக்கிய முடிவுகளை எடுத்ததாக கூறப்படுகிறது. சசிகலாவின் படம் தனது கட்சி போஸ்டர்களில் இடம்பெறக்கூடாது எனவும் அவர் கட்சி நிர்வாகிகளிடம் கூறியதாக பேசப்படுகிறது. இதனை அடுத்து அமமுக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் எதிலும் சசிகலாவின் படம் இடம்பெறவில்லை. இதனால் அவர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.