முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குபின் ஓபிஎஸ் தர்ம யுத்தம் தொடங்கியபோது அதிமுக கட்சித் தொண்டர்கள் சசிகலாவை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்தனர். அதுமட்டுமல்லாமல் அ.தி.மு.க. சட்டமன்ற கட்சித்தலைவராகவும் சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். இச்சூழலில் சசிகலா சிறை சென்றதும் அ.தி.மு.க.வில் பல திருப்பங்கள் அரங்கேறியது. அதாவது சசிகலா சிறைசென்ற பின், கடந்த 2017 ஆம் வருடத்தில் அ.தி.மு.க பொதுக்குழுக்கூட்டம் கூட்டப்பட்டு சசிகலாவின் பொதுச்செயலாளர் நியமனமானது ரத்து செய்யப்பட்டது.
அத்துடன் கட்சியை வழிநடத்த ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பும் ஏற்படுத்தப்பட்டது. இதையடுத்து சசிகலா நியமித்த துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதுடன், கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார். இதற்கிடையில் சசிகலா, டி.டி.வி உள்ளிட்ட அவர்களது குடும்பத்தினரும் ஓரங்கட்டப்பட்டனர். எனினும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா நியமனத்தை ரத்துசெய்து கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு ஏற்படுத்தப்பட்ட, சென்ற 2017 ஆம் வருடம் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என அறிவிக்கக்கோரி சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் சசிகலா வழக்கு தொடர்ந்து இருந்தார்.
அவ்வாறு சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக் கோரி அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தரப்பில் இடையீட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த இடையீட்டு மனு மீதான வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த சூழ்நிலையில் இந்த மாதம் 8ஆம் தேதி தீர்ப்புக்காக பட்டியலிடப்பட்டது. இருந்தாலும் நீதிபதி விடுப்பில் சென்றதால் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் சசிகலா தொடர்ந்த வழக்கு குறித்து ஒ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி மனுக்கள் மீதான தீர்ப்பு இன்று (ஏப்ரல்.11) வழங்கப்பட இருக்கிறது. இத்தீர்ப்பு அரசியல் அரங்கில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.