அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்றுக்கொண்டார். இதைத் தொடர்ந்து கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 29ம் தேதி இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறை செல்லப்பட்டதால் அதிமுகவை வழிநடத்திச் செல்ல முடியவில்லை. இதனால் கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டது. அப்போது சசிகலா பொதுச் செயலாளர் பதவியிலிருந்தும், டிடிவி தினகரன் துணைப் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமி தெரிவு செய்யப்பட்டதை அடுத்து சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் சசிகலா 2017 ஆம் ஆண்டு வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அந்த வழக்கில் ஓ பன்னீர்செல்வம் எடப்பாடி கூட்டிய பொதுகுழு செல்லாது என்றும் அது சட்டத்திற்கு புறம்பானது என்றும் கூறி இருந்தார். மேலும் ஓ பன்னீர்செல்வம் எடப்பாடி ஆகியோர் தங்களுக்கு என புதிய பதவிகளை உருவாக்கியது சட்டவிரோதமானது எனவும், அந்த மனுவில் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு கடந்த மூன்று வருடங்களாக நடைபெற்ற நிலையில் இரு தரப்பு வாதங்களும் கேட்டு சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று தீர்ப்பு வழங்கும் என முடிவு செய்திருந்தது. ஆனால் நீதிபதிகள் வராததால் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில் அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என்றும், அவரது வழக்கை தள்ளுபடி செய்வதாகவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.