சசிகலா விடுதலையில் சிறப்பு சலுகை இல்லை என்று கர்நாடக மாநிலம் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் கைது செய்யப்பட்டு சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் கர்நாடகா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் நான்காண்டு சிறை தண்டனை என்பது அடுத்த ஆண்டு ஜனவரி 27ம் தேதியுடன் நிறைவு பெற உள்ளது. அதற்கு முன்னதாக சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை செலுத்தினால் மட்டுமே ஜனவரி 27ஆம் தேதி விடுதலை செய்யப்படுவார். அப்படி இல்லை என்ற பட்சத்தில் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என்று நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து சில நாட்களுக்கு முன்பு சசிகலா வழக்கறிஞர் முத்துக்குமார் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் சசிகலா செலுத்தவேண்டிய அபராத தொகையை 4 காசோலையாக 10 கோடியே 10 ஆயிரம் ரூபாய்யை செலுத்தினார்கள். இந்த நிலையில் நேற்றைய தினம் சசிகலாவினுடைய வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் சிறைத்துறை டிஐஜியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அதாவது நன்னடத்தையின் அடிப்படையில் மாதத்திற்கு மூன்று நாள் நன்னடத்தை விதி வருகின்றது. அதன்படி பார்த்தால் 4 ஆண்டுகளில் 129 நாட்கள் வருகிறது.
இதனை கருத்தில் கொண்டு சசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். மேலும் கர்நாடக சிறைச்சாலையில் அவர் கன்னடம் பயின்று வருவதால் அதனை சிறப்பு சலுகையாக ஏற்றுக்கொண்டு விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இருந்தார். இந்த நிலையில் சசிகலாவின் வழக்கறிஞர் கோரிக்கை தொடர்பாக இன்று பெங்களூரில் செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மையா சசிகலா விடுதலை குறித்து சிறப்பு சலுகை காட்ட முடியாது என திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார். இதன் காரணமாக சசிகலா அடுத்த ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி தான் அவர் வெளியே வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. நன்னடத்தை விதிகள் எதுவுமே சசிகலாவுக்கு பொருந்தாது என்ற கருத்தையும் உள்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.