ஆதிதிராவிட மக்கள் தங்களுக்கு சாலை அமைத்து தருமாறு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆதிதிராவிடர் காலனியில் சுமார் 200 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த காலனியில் வசித்து வந்த சின்னையா என்பவர் உடல்நலக் குறைவினால் திடீரென மரணமடைந்தார். இவரது சடலத்தை எடுத்துச் செல்ல சரியான சாலை வசதி இல்லை. எனவே ஆதிதிராவிடர் குடியிருப்பிலிருந்து 1 கி.மீ தொலைவிலுள்ள மயானத்திற்கு இடையிலுள்ள குளம் மற்றும் புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்து அங்கு நெல் விவசாயம் நடத்தி வரும் நெற்பயிர்களை மிதித்து சென்று இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்து வருகின்றனர்.
இதுகுறித்து ஆதிதிராவிடர் காலனியில் வசித்து வருபவர்கள் தங்கள் குடியிருப்பில் யார் இறந்தாலும் அவர்களது சடலத்தை எடுத்துச் செல்வதற்காக சரியான சாலை வசதி செய்து தரப்படவில்லை என்று கூறியுள்ளனர். மேலும் மழைக்காலத்திலும் பயிரிடும் பருவத்திலும் யாராவது உயிரிழந்துவிட்டால் அவர்களது சடலமும் குளத்தைத் தாண்டி நெற்பயிர்களை மிதித்து தான் எடுத்துச் செல்லப்படுகிறது என்று கூறியுள்ளனர். இவர்கள் காலங்காலமாக இவ்வாறுதான் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்து வருவதாக கூறியுள்ளனர். மேலும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தங்களுக்கு ஒரு சாலையை அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.