தலையில் கல்லைப்போட்டு தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நாதேகவுண்டன் புதூர் பகுதியில் ஆடு மேய்க்கும் தொழிலாளியான நடராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற நடராஜ் நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் நடராஜின் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். அப்போது அப்பகுதியில் இருக்கும் தோட்டத்தில் உடலில் பலத்த காயங்களுடன் நட்ராஜ் சடலமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நடராஜின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் நடராஜ் இறந்து கிடந்த இடத்தில் குளிர்பான பாட்டில்கள், மது பாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளர்கள் இருந்துள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் நடராஜ் சிலருடன் அமர்ந்து மது குடித்தது தெரியவந்துள்ளது. அப்போது ஏற்பட்ட தகராறில் தலையில் கல்லை போட்டு நடராஜ் கொலை செய்யப்பட்டுள்ளார். இது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.