தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த மாணவியின் சடலத்தை தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்டனர்.
பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள கே.புதூர் கிராமத்தில் விவசாயியான ராசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராகவி என்ற மகள் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற ராகவி நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை அனைத்து இடங்களிலும் தேடிப் பார்த்துள்ளனர். அப்போது தனியாருக்கு சொந்தமான ஒரு கிணற்றுக்கு அருகில் ராகவியின் கண்ணாடி, கைகடிகாரம் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 3 மணிநேர போராட்டத்திற்கு பிறகு ராகவியை சடலமாக மீட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராகவியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.