மதுரையில் சட்டத்திற்கு விரோதமாக மதுபாட்டில்கள் விற்ற பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.
தற்போது உள்ள காலகட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் சில நபர்கள் சட்டத்திற்குப் புறம்பாக புகையிலை, கஞ்சா மற்றும் மது பாட்டில்களையும் விற்பனை செய்கின்றனர். இதனை தடுக்க காவல்துறையினர் பல முயற்சிகளில் ஈடுபட்டாலும் ஆங்காங்கே இவ்வாறான செயல்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. இதனையடுத்து காவல்துறையினர் குற்றச் செயல்களை தடுக்கும் பொருட்டு சில பகுதிகளில் ரோந்து செல்வது வழக்கம்.
அந்த வகையில் மதுரை மாவட்டம் சேடப்பட்டியிலிருக்கும் காவல் நிலைய போலீசார் அப்பகுதியில் ரோந்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியில் பேச்சியம்மாள் என்பவர் அவருடைய பெட்டிக்கடையில் சட்டத்திற்குப் புறம்பாக மதுபாட்டில்களை விற்பனை செய்வது கண்டறியப்பட்டது. இதனால் காவல்துறையினர் அவரிடமிருந்த 39 மதுபாட்டில்களை பறிமுதல் செய்ததோடு மட்டுமல்லாமல் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.