இந்தியாவின் பெண்களின் திருமண வயதை தற்போது 21 ஆக உயர்த்த பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.
இந்தியாவில் 18 வயது முதல் 29 வயது வரையிலான பெண்களில் இதுவரை 25 சதவீதம் பேர் சட்டபூர்வ வயதை எட்டுவதற்கு முன்னதாகவே திருமணம் செய்துள்ளது தெரியவந்துள்ளது. இதேபோன்று ஒரு சதவீத பெண்கள் போதைக்கு அடிமையாகி இருப்பதாகவும் தேசிய குடும்ப நல ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் நாடு முழுவதும் 707 மாவட்டங்களில் 6.30 லட்சம் குடும்பத்தினரிடம் தேசியக் குடும்ப நலத்துறை சார்பில் பல்வேறு அம்சங்கள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளபட்டிருக்கிறது.
அதில் குறிப்பாக சட்டபூர்வ வயதை எட்டுவதற்கு முன்னதாக திருமணம் செய்தவர்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதில் 18 வயது முதல் 29 வயது உடைய பெண்களில் 25 சதவீதம் பேரும், 21 – 29 வயதுடைய ஆண்களில் 15 சதவீதம் பேரும் முன்னதாகவே திருமணம் செய்துள்ளதாக கூறியுள்ளனர்.
இந்தியாவில் பெண்களின் திருமண வயது 18 எனவும், ஆண்களின் திருமண வயது 21 எனவும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. தற்போது பெண்களின் திருமண வயதையும் 21 ஆக உயர்த்த பரிசீலனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும். இதைப்போல போதை பழக்கத்திற்கு அடிமையானவர்கள் தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் நாடு முழுவதுமாக 22 சதவீத ஆண்கள் மது அருந்துவதாக தெரியவந்திருக்கிறது. இவர்களில் 15 சதவீதத்தினர் தினந்தோறும் என்ற வகையிலும், 43 சதவீதத்தினர் வாரத்துக்கு ஒருமுறையும் மது அருந்துகிறார்கள்.
இதைப் போலவே ஒரு சதவிகித பெண்களும் மது அருந்துவது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அவர்களில் 17 சதவிகிதம் பேர் தினமும் மது அருந்துகின்றனர் எனவும், 37 சதவீதத்தினர் வாரத்திற்கு ஒரு முறை மது அருந்துவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மது அருந்தும் பெண்களின் அதிகபட்சமாக அருணாசலப் பிரதேசத்தில் 15 சதவீதத்தினரும், சிக்கிமில் 15 சதவீதத்தினரும் இருக்கின்றனர்.