கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தோல்வியடைவது உறுதி என்று அம்மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.
பெங்களூருவில் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே சிவகுமார், சித்தராமையா உள்ளிட்டோர் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து சட்டப்பேரவைக்கு மிதிவண்டியில் பயணம் செய்தனர். அங்கு பேட்டியளித்த சித்தராமையா, மக்கள் விரோத கொள்கையை பின்பற்றும் பாஜகவுக்கு தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். பிரதமர் மோடி, முன்னாள் முதல்வர் எடியூரப்பா, தற்போதைய முதல்வர் பசவராஜ் பொம்மை என யாராலும் பாஜக அரசை காப்பாற்ற முடியாது.
கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பாஜக தோல்வியடைவது உறுதி. காங்கிரஸ் வெற்றி நிச்சயம். ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக நான் பேசவில்லை. மக்கள் நலனைக் காப்பாற்ற காங்கிரஸ் ஆட்சி அமைய உள்ளது என்று கூறியுள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலில் பிரதமர் மோடியின் அலை உதவாது என்று முன்னாள் முதல்வர் எடியூரப்பா நேற்று முன்தினம் கூறினார். பாஜக செயற்குழு கூட்டத்தில் இவ்வாறு கூறிய அவர் வளர்ச்சித் திட்டங்களில் பாஜக கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய சித்தராமையா, சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தோல்வி உறுதி என்று தெரிவித்துள்ளார்.