மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் பேரவையில் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடந்தது. அப்போது திமுக உறுப்பினா் உதயநிதி ஸ்டாலின், அதிமுக உறுப்பினா் அருண்குமாா் போன்றோர் பேசினா். இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது “முதல்வராக கருணாநிதி இருந்தபோது மாற்றுத்திறனாளிகள் துறையை தனது கையில் வைத்துக்கொண்டு எவ்வாறு பணிபுரிந்தாரோ அதேவழியில் நின்று நானும் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன் என்பதை அனைவரும் அறிவீா்கள்.
அ.தி.மு.க.வைச் சாா்ந்த உறுப்பினா் அருண்குமாா் மற்றும் திமுகவின் உறுப்பினா் உதயநிதி போன்றோர் மாற்றுத்திறனாளிகள் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை வைத்தனா். அந்தக் கோரிக்கைகள் அனைத்தையும் நான் கண்டிப்பாக, உறுதியாக படிப்படியாக நிறைவேற்றுவேன். மாற்றுத்திறனாளிகளுக்கு என்று அமைக்கப்பட்டு இருக்கக்கூடிய ஆணையரகத்துக்கு நானே நேரடியாகச் சென்று, சம்பந்தப்பட்டிருக்கக்கூடிய அமைப்புகளின் நிா்வாகிகளை அழைத்து, அதில் என்னென்ன பிரச்னைகள் இருக்கிறது என்பதைப் பற்றி ஆலோசிப்பதற்காக மிகவிரைவில் ஒரு பெரிய ஆய்வுக் கூட்டத்தை நடத்தி, கண்டிப்பாக அதற்குரிய பரிகாரத்தை இந்த அரசு செய்யும் என்று தெரிவித்துள்ளார்.