சட்டமன்றத்தை முற்றுகை போராட்டத்திற்கு தடை கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக சட்டமன்றத்தை முற்றுகை இடும் போராட்டத்தை நாளை நடத்த உள்ளதாக தமிமுன் அன்சாரி அறிவித்திருந்த நிலையில் அதற்கு தடை விதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமிய அமைப்பினர் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தை கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தினர். இதனை விளைவாக தடியடி நடத்தியதை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்தது. நாளை இஸ்லாமிய அமைப்பினர் ஒன்று கூடி சட்டமன்றத்தை முற்றுகை இடும் போராட்டத்தை நடத்த உள்ளனர். சுமார் 10,000 பேர் இந்த போராட்டத்தில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அனுமதி பெறாமல் போராட்டம் நடத்த உள்ளதால் சட்ட ஒழுங்கு பாதிக்கும் நிலை உள்ளது என கூறி வாராகி என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
போராட்டம் நாளை நடைபெற உள்ளதால் இந்த மனுவை அவரசமாக விசாரிக்க வேண்டும் என நீதிபதிகள் சத்திய நாராயணன், ஹேமலதா அமர்வில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். மேலும் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் அதனை காவல்துறையினர் பார்த்து கொள்வார்கள் என்றும் கூறியுள்ளனர். இதனால் திட்டமிட்டபடி நாளை போராட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.