சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பெரம்பலூர் அருகே மாதிரி வாக்குப்பதிவு எந்திரம் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பூலாம்பட்டி பேரூராட்சி பேருந்து நிலையம் மற்றும் வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய இடங்களில் மாதிரி வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதில் வாக்கு பதிவு எந்திரத்தில் வாக்களிப்பது எப்படி என்பது குறித்து செயல்விளக்கம் காண்பிக்கப்பட்டது.
அப்போது மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள், கல்லூரி மாணவ-மாணவிகள் ஆகியோர் வாக்களிக்கும் விதம் குறித்தும், எந்திரத்தில் வாக்குப் பதிவு செய்வது குறித்தும் தெரிந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் வருவாய் ஆய்வாளர் கவுரி, தாசில்தார் பாலசுப்ரமணியம், துணை முதல்வர் சேகர், அரசு கல்லூரி முதல்வர் சிவனேசன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர்.