சிவகங்கையில் திருப்பத்தூர், காரைக்குடி சட்டமன்ற தொகுதிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தாலுகா அறைக்கு கொண்டு வரப்பட்டு சீல் வைக்கப்பட்டது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு எந்திரங்கள் அங்கீகரிக்கப்பட்ட கட்சியினர் முன்னிலையில் விளக்கமளித்து காட்டுதல், எந்திரங்களை சரிபார்த்தல், பழுதான எந்திரங்களை சரி செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர், சிவகங்கை, காரைக்குடி, மானாமதுரை ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சிவகங்கை தாலுகா அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தது. அவற்றை தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தலைமையில் மற்ற பகுதிகளுக்கு எடுத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து சிவகங்கை தாலுகா அலுவலகத்திலிருந்து காரைக்குடி, திருப்பத்தூர், மானாமதுரை சட்டமன்ற தொகுதிகளுக்கு பலத்த காவல்துறை பாதுகாப்புடன் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு அதிகாலை 2.30 மணிக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் திருப்பத்தூர் தாலுகா அலுவலகத்திற்கு வந்தடைந்தது.
இதில் 492 கட்டுப்பாட்டு கருவிகளும், 492 வாக்குப்பதிவு எந்திரங்களும், 533 வாக்களிக்கும் விவரம் குறித்த கருவிகள் என மொத்தம் 1517 எந்திரங்கள் வந்தடைந்துள்ளது. இதேபோல காரைக்குடி சட்டமன்ற தொகுதிக்கு 532 கட்டுபாட்டு கருவிகளும், 532 வாக்குப்பதிவு எந்திரங்களும் 576 வாக்களிக்கும் விவரம் குறித்த கருவிகளும் என மொத்தம் 1640 எந்திரங்கள் நகராட்சி அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தது. இந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அரசு அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் பாதுகாப்பாக அறைக்குள் வைக்கப்பட்டு பூட்டி சீல் வைக்கப்பட்டது. இந்த வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு 24 மணி நேரமும் காவல்துறையினர் துப்பாக்கி ஏந்தியபடி போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.