அதிமுக இடைச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி நேற்று இரவு திடீரென்று டெல்லி புறப்பட்டு சென்றார். தேர்தல் ஆணையத்தில் மனு கொடுக்க அவர் சென்றிருப்பதாக தகவல் வெளியானது. பின்னர் இன்று காலை 11:30 அணியளவில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார். சுமார் 20 நிமிடங்கள் அவர்கள் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்தனர். அதன்பிறகு எடப்பாடி பழனிச்சாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது: “இன்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து விட்டு வருகிறோம். நானும், வேலுமணி, சிபி சண்முகம் அவரை சந்தித்தோம். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு.
தமிழகத்தில் தற்பொழுது அடியோடு சட்ட ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. தமிழகம் முழுவதும் தடையின்றி போதைப் பொருள் கிடைக்கின்றன. இதனால் மாணவர்கள், இளைஞர்கள் சீரழியக்கூடிய சூழ்நிலையை எடுத்துச் சொல்லி இருக்கின்றோம். இதை ஏற்கனவே நான் பலமுறை சட்டமன்றத்தில் பேசும்போது, தற்போது இருக்கின்ற முதல் அமைச்சருடைய கவனத்திற்கு கொண்டு வந்திருக்கின்றேன். அறிக்கையின் வாயிலாக தெரிவித்தோம். ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதனால் மத்திய உள்துறை அமைச்சருடைய கவனத்திற்கு கொண்டு வந்திருக்கின்றோம்.
அதோடு உயர்கல்வித்துறை அமைச்சர் பேசுகின்ற போது, பேட்டி கொடுக்கின்ற பொழுது, தமிழகத்திலே போதை பொருள் குறித்து பேட்டி அளித்தார். சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டியது மாநில அரசின் கடமை. எங்கே போதை பொருள் விற்றாலும் அல்லது அண்டை மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வந்தாலும் அதை தடுத்து நிறுத்தி, சட்டரீதியாக யார் இந்த கடத்தலில் ஈடுபடுகிறார்கள் ? யார் இந்த பொருள் விற்பனை செய்கிறார்கள் ? என அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இன்றைக்கு தமிழகத்தில் பார்த்தீங்கன்னா… சொத்து வரி கடுமையாக உயர்த்திருக்காங்க. 100% உயர்த்திருக்காங்க வீடுகளுக்கு, அதே போல கடைகளுக்கு 120 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. கடுமையாக மின் கட்டண உயர்வு. கிட்டத்தட்ட பாத்தீங்கன்னா.. சராசரியாக 34% உயர்த்திருக்காங்க. 12 இலிருந்து 52% உயர்த்தப்பட்டிருக்கிறது. இதில் 500 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு 53 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அதோடு தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் வருடத்திற்கு 6% உயர்த்துக் கொள்ளலாம் என்று சொல்லிட்டாங்க.
எங்களுடைய ஆட்சி நடக்கும் போது மின்கட்டண உயர்வு என சொல்லி எப்படி போராட்டம் நடத்தினார்கள் ? மக்களுடைய உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும். இரண்டு ஆண்டு காலம் கடுமையான கொரோனா காலம். வேலை வாய்ப்பு இல்லாமல், பொருளாதார சூழ்நிலை மந்தமாக இருக்கின்ற நேரத்துல.. வாழ்வதற்கே போராடிக் கொண்டிருக்கக்கூடிய இந்த தருணத்தில் உயர்த்துவது முறையா ? இரண்டு ஆண்டு காலம் வேலை இல்லை, எல்லாமே முடங்கி தான் இருந்தோம். அந்த அளவுக்கு கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டிருந்தது.
இது எளிதா பரவக்கூடிய நோய். அப்படிப்பட்ட காலத்தில இருந்து இப்போது தான் படிப்படியா மீண்டு கொண்டு வருகின்றோம். பொருளாதாரம் இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா வந்து கொண்டிருக்கிறது. இந்த நேரத்துல இவ்வளவு பெரிய உயர்வு இருக்கக்கூடாது. அதனால மக்கள் தான் பாதிக்கிறாங்க, மக்கள் கடுமையான எதிர்ப்பு கொந்தளிப்பு மக்களிடத்தில் ஏற்பட்டு இருக்கின்றது. 11ஆம் தேதி ஓபிஎஸ் என பத்திரிக்கையாளர் கேள்விகேட்டுக் கொண்டு இருக்கும் போதே ”சாரி வணக்கம்” என கூறி கிளம்பினார்.