Categories
மாநில செய்திகள்

சட்டவிரோதமாக சந்தன மரக்கட்டைகள்…. வெங்கடாசலம் மீது வனத்துறை வழக்கு பதிவு!!

சட்டவிரோதமாக சந்தன மரக்கட்டைகளை வைத்திருந்ததாக கூறி, வெங்கடாசலம் மீது வனத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய தலைவராக இருந்த வெங்கடாசலம் ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரி ஆவார்.. 2019ஆம் ஆண்டு முதல் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக இருந்து வந்தார். இந்த சூழலில் வெங்கடாசலம் விதிமுறை மீறி, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், அதிமுக ஆட்சியில் பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க பெரும் தொகையை வெங்கடாச்சலம் லஞ்சமாக பெற்றதாக வந்த தகவலின் அடிப்படையில், ஊழல் வழக்கு பதிவு செய்து கடந்த 23ஆம் தேதி முதல் சென்னை கிண்டியில் உள்ள அலுவலகம் மற்றும் வேளச்சேரியில் உள்ள வீடு என 5 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்தனர்.

இந்த சோதனையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய தலைவர் வெங்கடாசலம் வீட்டிலிருந்து கணக்கில் காட்டப்படாத 13.5 லட்சம் பணம், 11 கிலோ தங்கம், 15 கிலோ சந்தன மர பொருட்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை தகவல் தெரிவித்தது. கைப்பற்றப்பட்ட தங்கம், பணம் உள்ளிட்ட பொருட்களுக்கு சரியாக கணக்கு விவரம் தெரிவித்து விட்டால், அவையெல்லாம் திருப்பிக்கொடுக்கப்பட்டு விடும் என்று லஞ்ச ஒழிப்பு துறையினர் தெரிவித்தனர்.

மேலும் சந்தன பொருட்கள் தொடர்பாக வனத்துறைக்கு அதிகாரிகள் தகவல் கொடுத்தனர். இந்நிலையில் சட்டவிரோதமாக சந்தன மரக்கட்டைகளை வைத்திருந்ததாக கூறி, முன்னாள் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் மீது தமிழ்நாடு வன பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைச் செயலாளர் சுப்ரியா சாகுவிற்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், தலைமை செயலாளர் இறையன்பு இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |