கடந்த 2010 ஆம் வருடம் ஜனவரி மாதம் 17-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் ஏட்டு தங்கராஜ் இரவுநேர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் மணல் கடத்திவந்த ஒரு லாரி சோதனை சாவடியில் வைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலி மீது மோதி சேதப்படுத்தியது. அத்துடன் அங்கு பணியிலிருந்த ஏட்டு தங்கராஜ் மீதும் அந்த லாரி மோதியது. இதனால் அவர் காயம் அடைந்தார்.
மேலும் இச்சம்பவத்தில் சோதனை சாவடியில் நின்ற ஒரு காரும் சேதமடைந்தது. இதையடுத்து மணல் கடத்தி சென்ற லாரி அங்கு நிற்காமல் சென்றுவிட்டது. இதுகுறித்து திக்குறிச்சியை சேர்ந்த வர்கீஸ் மகன் ஜோணி(41), தங்கப்பன் மகன் அருள் (39), அன்பையன் மகன் பாபலேயன்(43), சின்னப்பன் மகன் விஜயகுமார்(40), கப்ரியல் மகன் ஜெகன் (40), ராமகிருஷ்ணன் (40) ஆகிய 6 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
அதன்பின் இது பற்றிய வழக்கு விசாரணை குழித் துறை கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இவ்வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அவற்றில் 6 பேருக்கும் 14 வருடம் சிறைதண்டனையும், ரூபாய்.20 ஆயிரம் அபராதமும் விதித்து கூடுதல் நீதிபதி புருஷோத்தமன் தீர்ப்பு வழங்கினார்.