புதுச்சேரியில் சட்டவிரோதமாக முதுநிலைப் படிப்பில் சேர்க்கப்பட்ட 65 பேரின் மாணவர் சேர்க்கையை ரத்து செய்த மருத்துவ கவுன்சில் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது. இதனால் அவர்கள் பெற்ற முதுநிலை மருத்துவப்பட்டம் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரியில் உள்ள மருத்துவ மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் 2017-2018 ஆம் கல்வி ஆண்டில் மருத்துவ மேற்படிப்புக்காக நடத்தப்பட்ட கலந்தாய்வில் பார்க்காமலேயே 65 பேர்களுக்கு கல்லூரிகளில் இடம் வழங்கப்பட்டது. இது பற்றி விசாரித்த இந்திய மருத்துவ கவுன்சில் 65 பேரின் மாணவர் சேர்க்கையை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்திருந்தது. அதனை எதிர்த்து மாணவர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் மருத்துவ கவுன்சிலின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்ததுடன் மாணவர்கள் தேர்வு எழுதவும் அனுமதி அளித்தது. இதையடுத்து அந்த மாணவர்கள் தற்போது படிப்பை முடித்துவிட்டனர். இந்நிலையில் கலந்தாய்வு குளறுபடிகளால் பாதிக்கப்பட்டவர்கள் தொடுத்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மாணவர்களை நீக்கம் செய்து மருத்துவ கவுன்சில் பிறப்பித்த உத்தரவை தீர்ப்பில் உறுதி செய்தார்.
கலந்தாய்வில் ஏற்பட்ட குழப்பத்தை பயன்படுத்தி மாணவர்களை சேர்த்த ஆறுபடைவீடு, விநாயகாமிஷன், ஸ்ரீ மகாத்மா காந்தி, மணக்குள விநாயகர், வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லூரிகள் மற்றும் புதுச்சேரி மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனம் ஆகியவற்றிற்கு தலா 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். சட்ட விரோத மாணவர் சேர்க்கைக்கு கருணை காட்டினால் அது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என்றும் நீதிபதி தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். சட்டவிரோத மாணவர் சேர்க்கை ரத்து உத்தரவு செல்லும் என சென்னை உயர்நீதிமன்ற உத்தரவால் புதுச்சேரியில் முதுநிலை மருத்துவ படிப்பை முடித்த 65 பேரின் பட்டம் பறிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.