உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள லாவே மாவ் கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்களுக்கு இடையே பல ஆண்டுகளாக விவசாய நிலம் குறித்து பிரச்சனை நீடித்து வந்துள்ளது. குறிப்பிட்ட இடத்தை தங்களுக்கு சொந்தமானது என இரு தரப்பும் சண்டையிட்டு வந்த நிலையில், ஒரு சகோதரர் விவசாயம் செய்ய பிரச்சனைக்குரிய நிலத்தில் டிராக்டர் மூலம் உழ தொடங்கியுள்ளார். இதனையடுத்து மற்றொரு சகோதரர் அவரது குடும்பத்துடன் அந்த இடத்துக்கு வந்துள்ளனர். வந்தவர்கள் டிராக்டரை நிற்க கூறிய நிலையில், டிராக்டர் நில்லாமல் தொடர்ந்து வந்ததனை அடுத்து ஒரு சகோதரரின் மனைவி தனது கையில் இருந்த குழந்தையை நிற்காமல் வந்துகொண்டிருந்த டிராக்டரின் சக்கரம் முன்னால் வீசியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த டிராக்டரை ஓட்டிய ஓட்டுநர் உடனடியாக டிராக்டரை நிறுத்தியுள்ளார். இதனால் குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. அதன் பின் குழந்தையின் தாய் குழந்தையை தூக்கி மீண்டும் சண்டையிட ஆரம்பித்துள்ளார். இந்த சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் தனது மொபைலில் வீடியோ எடுத்து அதை இணையத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது. இதனையடுத்து இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறியுள்ளார்.