சட்ட விதிமுறைகளை பின்பற்றினால் திருமண பதிவு சான்றிதழ் வழங்கலாம் என மதுரை ஐகோர்ட் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள திருசுழியைச் சேர்ந்த சரத்குமார் என்பவர் லெடியா என்பவரை காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் சென்ற ஜூன் மாதம் பத்தாம் தேதி திருமணம் செய்து கொண்ட நிலையில் தங்கள் திருமணத்தை சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் பதிவு செய்ய கோரி சார்பதிவாளர் அலுவலகத்துக்கு சென்று ஜூன் 17ஆம் தேதி கேட்டபொழுது சார் பதிவாளர் லெடியாவுக்கு 21 வயது பூர்த்தியாகவில்லை என கூறி மறுத்துவிட்டார்.
இதனால் தங்கள் திருமணத்தை பதிவு செய்ய சார்பதிவாளருக்கு உத்தரவிடக்கோரி மதுரை கோர்ட்டில் சரத்குமார் மனு தாக்கல் செய்த நிலையில் மனுவை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்து உத்தரவு பிறப்பித்தார். அதில் அவர் கூறியதாவது, சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் திருமண பதிவு செய்ய வேண்டும் என்றால் முன்கூட்டியே நோட்டீஸ் வழங்கி இருக்க வேண்டும். மேலும் அதை சார் பதிவாளர் திருமண அறிவிப்பு புத்தகத்தில் பதிவு செய்ய வேண்டும். அந்த புத்தகம் அனைவரும் பார்க்கும் வகையில் இருக்க வேண்டும்.
மனுதாரர் இந்து. அவர் திருமணம் செய்த பெண் கிறிஸ்தவர். இந்து திருமண சட்டத்தில் இந்துக்கள் சுயமரியாதை அல்லது சீர்திருத்த திருமணம் செய்து கொள்ளும் பொழுது திருமணத்தை அந்த சட்டத்தின் கீழ் பதிவு செய்ய முடியும். கிறிஸ்தவர்கள் திருமண சட்டத்தின் படி மணமக்கள் இருவரும் கிறிஸ்தவர்களாக இருக்க வேண்டும் என சொல்லப்படவில்லை. ஆனால் அந்த திருமணம் தேவாலயத்தில் காலை 6 மணி முதல் 7 மணிக்குள் நடக்க வேண்டும் என கூறப்பட்டிருக்கின்றது. மனுதாரரின் திருமணம் அதன்படியும் நடக்கவில்லை.
ஆகையால் திருமணத்தை இந்த எந்த சட்டத்தின் கீழும் பதிவு செய்ய முடியாது. மனுதாரரும் அவரின் மனைவியும் இந்த எந்த சட்டத்தின் கீழும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இதனால் இவர்களின் திருமணத்தை சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் நிறுத்த முடியாது. மனுதாரர்கள் சட்ட பிரிவு ஐந்து இன் கீழ் நோட்டீஸ் அளித்துள்ள நிலையில் அது மூன்று மாதங்களுக்கு செல்லுபடியாகும். மனதாரர் சட்டத்தின் நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். அவர்கள் சட்டத்தை பின்பற்றும் பொழுது லெடியாவுக்கு 21 வயது பூர்த்தியாகவில்லை எனச் சொல்லி மனதாரருக்கு திருமண பதிவு சான்றிதழ் வழங்க சார் பதிவாளர் மறுக்கக்கூடாது என நீதிபதி கூறியுள்ளார்.