சிவகங்கை மாவட்டம் தாயமங்கலம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தாயமங்கலம் பகுதியில் இளையான்குடி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு ஒருவர் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தார். அவரிடம் சென்று காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் மேலநெட்டூர் கிராமத்தில் வசித்து வரும் கருப்பையா என்பவரது மகன் ரவிச்சந்திரன் (48) என்பது தெரியவந்தது.
மேலும் அவர் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதும் தெரிந்தது. இதையடுத்து அவரிடமிருந்த 50 மதுபாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட குற்றத்திற்காக ரவிச்சந்திரனை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.