பெரம்பலூரில் மோட்டார் சைக்கிளில் சட்டவிரோதமாக கள் கொண்டு சென்ற இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் கடந்த 10-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனை முன்னிட்டு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினர் பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வந்த ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் சேலம் மாவட்டம் பகடப்பாடி பகுதியில் வசித்து வரும் பெரியசாமி, ராமராஜ் என்பது தெரியவந்தது.
மேலும் அவர்கள் பனைமரத்து கள்ளை பகடப்பாடியில் இருந்து மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பெரம்பலூர் காவல் துறையினர் ராமராஜ், பெரியசாமி ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிந்து பின் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த ஐந்து லிட்டர் கள்ளையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர்கள் இருவரும் ஜாமீனில் வெளியே வந்தனர்.