மாணவி உடல் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ராஜமங்கலம் அருகே ஆறுதெங்கன்விளை பகுதியில் ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசின் அனுமதியின்றி வீட்டில் வைத்து பட்டாசு தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு பார்வதி என்ற மனைவியும் தேன்மொழி (13) மற்றும் வர்ஷா(10) என்ற 2 மகள்களும் இருக்கின்றனர். இவர்கள் வீட்டில் 2 முயல்களை வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில் வர்ஷா முயல் குட்டிகளுக்கு சாப்பாடு வைப்பதற்காக சென்றுள்ளார். அப்போது திடீரென அறையில் இருந்த வெடிமருந்து திடீரென வெடித்தது. இதில் வர்ஷா உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் வீட்டில் இருந்தால் பார்வதிக்கும் படுகாயம் ஏற்பட்டது. இதுகுறித்து ராஜமங்கலம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வர்ஷாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பிறகு உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பார்வதியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ராமலட்சுமி என்பவர் அரசின் அனுமதியின்றி பட்டாசு தயாரித்து வந்துள்ளார். இந்நிலையில் ராமலட்சுமி, ராஜனுக்கும் வெடி மருந்தை கொடுத்து பட்டாசு தயாரிக்குமாறு கூறியுள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் ராமலட்சுமி மற்றும் ராஜன் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.