சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
குமரி மாவட்டத்திலுள்ள மணவாளக்குறிச்சி பகுதியில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிளை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் அவர்கள் சட்டவிரோதமாக 1.100 கிலோ கஞ்சாவை மோட்டார் சைக்கிளில் கொண்டு வந்தது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து அவர்கள் 3 பேரிடமும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் வர்த்தக நாடார் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் சகாய கவின், மறுகால்தலை குட்டி, ராஜமங்கலம் மாரிமுத்து என்பதும், இவர்கள் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வதும் தெரியவந்துள்ளது. மேலும் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.