சட்ட விரோதமாக கஞ்சா கடத்திய பெண் உள்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வேப்பனப்பள்ளி பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த 2 மோட்டார் சைக்கிள்களை நிறுத்துமாறு காவல்துறையினர் சைகை காண்பித்தனர். இந்நிலையில் காவல்துறையினரை பார்த்ததும் மோட்டார் சைக்கிள்களில் வந்த பெண் உள்பட 6 பேர் தப்பி ஓட முயற்சி செய்தனர். அவர்களில் 3 பேரை காவல்துறையினர் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் அவர்கள் சின்னபத்தளப்பள்ளி கிராமத்தில் வசிக்கும் வெங்கடேசன், ராஜ் மற்றும் குள்ளம்மா என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் சட்டவிரோதமாக கஞ்சா கடத்தி வந்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் 3 பேரையும் கைது செய்ததோடு, அவர்களிடம் இருந்து 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய 3 பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.