சட்ட விரோதமாக ரேஷன் அரிசி கடத்திய குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாவூர்சத்திரம் பகுதியில் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு மினி லாரியை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அதில் 40 மூட்டைகளில் 2000 கிலோ ரேஷன் அரிசி இருந்ததை காவல்துறையினர் பார்த்துள்ளனர்.
அதன்பின் மினி லாரியில் வந்தவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் மருதடியூர் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் மற்றும் கவியரசு என்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து அருண் குமார் மற்றும் கவியரசு ஆகிய இரண்டு பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அரிசி மூட்டைகள் மற்றும் மினி லாரியை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.