கஞ்சா விற்பனை செய்த 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள ரிஷிவந்தியம் அருகே காட்டுடையார்கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி ரிஷிவந்தியம் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான ஒரு குழு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை காவல்துறையினர் அழைத்து விசாரணை செய்துள்ளனர்.
அந்த விசாரணையில் திருக்கோவிலூர் அருகே மெகலார் கிராமத்தைச் சேர்ந்த சுபாஷ் என்பது தெரியவந்தது. அவர் கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. இவர் காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் தனக்கு கஞ்சா கொடுத்ததாகக் கூறியுள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் சுரேஷின் வீட்டை சோதனை செய்து பதுக்கி வைத்திருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சுபாஷ் மற்றும் சுரேஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.