விபத்தில் உயிரிழந்த சகோதரரின் ஆசையை நிறைவேற்ற அவரது ஆறு சகோதரிகள் செய்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம், கீழ வீதியை சேர்ந்த முருகன் என்பவர் அப்பகுதியில் இலை கடை ஒன்றை நடத்தி வந்தார். கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு அவர் ஒரு விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இவருக்கு அட்சய ரத்னா என்ற 13 வயது மகள் உள்ளார். தனது மகளுக்கு மஞ்சள் நீராட்டு விழாவை சிறப்பாக செய்ய வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டு உள்ளார். ஆனால் அவர் உயிர் இழந்த காரணத்தினால் அவரது குடும்பத்தினர்கள் என்ன செய்வது என்று அறியாமல் திகைத்தனர்.
இந்நிலையில் முருகனின் ஆறு சகோதரிகள் தங்களது சகோதரனின் ஆசையை நிறைவேற்ற முடிவு செய்து திருவாரூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 2000 பொது மக்களுக்கு உணவு வழங்கி யுள்ளனர். மேலும் 600 சீர்வரிசை தட்டுகளை திறந்த கண்டெய்னர் லாரியில் ஏற்றிக்கொண்டு செண்டை மேளம் முழங்க, வாண வேடிக்கை வெடிக்க, ஊர்வலமாக எடுத்து வந்து அசத்தியுள்ளனர். மேலும் லாரியில் முன் மறைந்த தங்களது சகோதரர் முருகனின் திருவுருவப் படத்தையும் வைத்துள்ளனர். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் ஆச்சரியப்பட்டனர். உயிரிழந்த சகோதரியின் ஆசையை நிறைவேற்ற மஞ்சள் நீராட்டு விழாவை சிறப்பாக நடத்திய அத்தைகளின் செயல் பலரையும் நெகழ்ச்சி அடைய வைத்தது.