சொத்துக் குவிப்பு வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சசிகலா எட்டாம் தேதி தமிழகம் வர இருக்கிறார். சசிகலா விடுதலை ஆனதற்கு அதிமுகவினர் பலரும் சசிகலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டி வரும் நிலையில், அவர்கள் மீது அதிமுக தலைமை நடவடிக்கை எடுத்து வருகின்றது. இதனிடையே டிடிவி தினகரன் அவ்வப்போது அதிரடி பேட்டிகளை கொடுத்து வருகிறார். சசிகலா விடுதலை ஆனதால் அதிமுகவில் வேதியல் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றது எனவும், அவர்கள்தான் அதிமுகவின் பொதுச் செயலாளர் எனவும் கூறி வருகின்றார.
இதனிடையே சசிகலா விடுதலை ஆனபோது அதிமுக கொடி கட்டிய காரில் சென்றதற்கு எதிராக அமைச்சர்கள் அதிமுக சார்பாக டிஜிபியிடம் மனு அளித்தனர். சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்த கூடாது எனவும் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இதற்கு பதிலடியாக டிடிவி தினகரன், அதிமுக கொடி கட்டி தமிழ்நாட்டிற்கு வருவோம். டிஜிபி என்ன ? முப்படை தளபதியிடம் போனாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என்று தெரிவித்திருந்தார்.
மேலும் டிடிவி தினகரன் – சசிகலா ஆதரவாளர்கள் 100 பேர் மனித வெடிகுண்டாக மாறி தமிழ்நாட்டிற்கு வருவோம் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அமைச்சர் சிவி சண்முகம், ஜெயக்குமார், தங்கமணி, அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மீண்டும் தமிழக டிஜிபி யை இன்று சந்தித்தனர். கலவரத்தை தூண்டுவதற்கும் டிடிவி தினகரன் – சசிகலா ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ளனர். மனித வெடிகுண்டாக மாறி தமிழ்நாட்டுக்குள் நுழைவோம் என்று தெரிவித்துள்ளனர். அதிமுக கொடி கட்டி சசிகலா தமிழகத்துக்குள் நுழைய விடக்கூடாது என்று அதிமுக சார்பாக டிஜிபியிடம் மனு அளித்தனர்.
பின்னர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தபோது பேசிய அமைச்சர் சிவி சண்முகம், ஊரை அடித்து கொள்ளையடித்து, சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் நான்கு ஆண்டுகள் தண்டனை அனுபவித்துவிட்டு சசிகலா சிறையில் இருந்து விடுதலையாகி நான்தான் அதிமுக என்று சொல்வது உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில் இருக்கின்றது.
தமிழ்நாட்டில் கலவரத்தை தூண்டும் வகையில் டிடிவி தினகரன் – சசிகலா ஆதரவாளர்கள் செய்யலப்படுகின்றார்கள். இவர்களிடம் இருந்து பொது மக்களை பாதுகாக்க வேண்டும். டிடிவி தினகரன் – சசிகலா ஆதரவாளர்கள் சதி திட்டம் தீட்டி கலவரத்தை தூண்டிவிட்டு அதிமுக மீது பழிபோட திட்டமிட்டு இருப்பதை தடுக்க வேண்டும் எனவும் டிஜிபியிடம் மனு அளித்ததாக தெரிவித்தார்.