விருதுநகர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பிரதோஷம் மற்றும் மகாளய அமாவாசை முன்னிட்டு வருகின்ற 23ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி பக்தர்கள் காலை 7:00 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிரதோஷம் மற்றும் மகாளய அம்மாவாசை அன்று சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
அதனை தொடர்ந்து வனப்பகுதியில் எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இரவு நேரங்களில் மலைப்பகுதியில் தங்குவதற்கு கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. மேலும் கோவிலுக்கு செல்லும் மலைப்பகுதியில் உள்ள நீரோடை பகுதிகளில் பக்தர்கள் இறங்கி குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அனுமதி நாட்களில் மழை பெய்தால் பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்றும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் வருகின்ற 27ஆம் தேதி நவராத்திரி விழா தொடங்குவதால் நவராத்திரி விழாவிற்கு அனுமதி அளிப்பது குறித்து ஆலோசனை நடத்திய பிறகு அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.