சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் மாசி பிரதோஷம், மகாசிவராத்திரி, அமாவாசை வழிபாட்டை முன்னிட்டு பிப்.28 (இன்று) முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட இருப்பதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இங்கு தமிழ் மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு 4 நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். அதன்படி பிப். 28 (இன்று) பிரதோஷம், மார்ச் 1ல் மகா சிவராத்திரி, மார்ச் 2ல் அமாவாசை என்று 3 நாட்கள் முக்கிய திருவிழாக்கள் நடைபெற இருக்கிறது.
இதில் பிப்.28 (இன்று) காலை 7:00 மணி முதல் மார்ச் 3 வரை தினசரி மதியம் 12:00 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள். தற்போது வெயிலின் தாக்கம் தொடங்கி இருப்பதால் எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொண்டு செல்வதை தவிர்ப்பதோடு, அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்கவேண்டும் என கோவில் நிர்வாகம், வனத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்..