மூதாட்டியின் வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற வாலிபரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் மூணு வீடு என்ற குடியிருப்பு பகுதியில் விசாலாட்சி என்பவர் வசித்து வருகிறார். இந்த மூதாட்டி உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்துள்ளார். இந்நிலையில் அதிகாலை 3 மணியளவில் மூதாட்டியின் வீட்டிற்குள் புகுந்த வாலிபர் பணம் மற்றும் நகை ஏதாவது உள்ளதா என தீவிரமாக தேடி பார்த்துள்ளார். அப்போது திடீரென கண்விழித்த மூதாட்டி திருடன் திருடன் என சத்தம் போட்டுள்ளார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று தப்பி ஓட முயன்ற வாலிபரை சுற்றி வளைத்து பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர்.
அதன்பின் பொதுமக்கள் அந்த வாலிபரை காவல் நிலையத்தில் ஒப்படைத்துவிட்டனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ் என்பது தெரியவந்துள்ளது. கடந்த 2 நாட்களாக விசாலாட்சியின் வீடு இருக்கும் பகுதியில் நோட்டமிட்டு மூதாட்டி தனியாக இருப்பதை அறிந்து சுரேஷ் திருட முயன்றது தெரியவந்துள்ளது.