தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதிலிருந்து தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இந்த கனமழையின் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் தொடர் மழையின் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னையில் உள்ள மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைமை அலுவலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டம் முடிவடைந்த பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் மழைக்காலத்தில் தமிழகம் முழுவதும் சீரான மின் விநியோகம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார். இதுவரை 10,77,910 பராமரிப்பு பணிகள் முடிவடைந்துள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு பெய்ய இருக்கும் கனமழையை எதிர்கொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும், இரவு நேரத்திலும் சீரான மின் விநியோகத்தை வழங்குவதற்காக சிறப்பு அதிகாரிகள் அனைத்து மாவட்டங்களிலும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் எனவும் கூறினார்.
அதன் பிறகு தமிழகத்தில் மத்திய அரசு மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று அனுப்பிய அறிக்கையை எங்களால் வெளிப்படையாக காட்ட முடியாது. ஏனெனில் அமைச்சராவதற்கு முன்பாக நான் சத்தியபிரமாணம் செய்துள்ளேன். மேலும் நிலக்கரி கொள்முதல் தொடர்பான அண்ணாமலையின் குற்றச்சாட்டுகள் எதிலும் உண்மை தன்மை இல்லை எனவும், மத்திய அரசு நிலக்கரி எவ்வளவு டாலருக்கு இறக்குமதி செய்ய கூறியுள்ளது என்பதையும் தெரிவிக்க வேண்டும். அவரிடம் ஆவணங்கள் இருந்தால் பேச சொல்லுங்கள். வெற்று விளம்பரம் செய்ய வேண்டாம் என்று கூறினார்.