ரயில்முன் தள்ளி கொலை செய்யப்பட்ட மாணவி சத்யாவின் மரணத்தை அறிந்து நொறுங்கிப் போய்விட்டதாக முதலமைச்சர் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். சென்னையில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் பேசிய அவர், “இயற்கையில் பெற்றோர்கள் குழந்தைகளை சமூக நோக்கம் கொண்டவர்களாக வளர்க்க வேண்டும் இந்த நேரத்தில் ஒரு முக்கிய விஷயத்தைக் கூற கடமைப்பட்டு உள்ளேன். வேதனையுடன் இதை தெரிவிக்கிறேன். இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் சத்யா என்ற மாணவிக்கு நடந்த துயரத்தை நினைத்து நான் நொறுங்கி போய் உள்ளேன். நான் மட்டுமல்ல, இதைப் படித்த, அறிந்து கொண்ட அனைவரும் துக்கத்தில்தான் இருப்பீர்கள். இதுபோன்ற சம்பவங்கள் தமிழகத்தில் நிகழக் கூடாது.
இது அல்ல நாம் காண நினைக்கக் கூடிய சமூகம். இனி எந்தப் பெண்ணுக்கும் இதுபோன்று நடக்காத வண்ணம் தடுக்கக் கூடிய கடமை ஒரு சமூகமாக நமக்கு இருக்கிறது. தங்களின் குழந்தைகள் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், தனித் திறன், அறிவு, ஆற்றல், சமூக நோக்கம் கொண்ட மனப்பான்மை கொண்டவர்களாக வளர்க்க வேண்டும். பாடப் புத்தக கல்வி மட்டுமல்ல, சமூகக் கல்வியும் அவசியமானது. தன்னைப் போன்று ஓர் உயிரை மதிக்கவும், பாதுகாக்கவும் கற்றுத் தர வேண்டும். நல்ல ஒழுக்கம், பண்பும் கொண்டவர்களாக அவர்கள் வளர்ந்து, வாழ்ந்து சமூகத்திற்கு தங்களின் பங்களிப்பை வழங்க வேண்டும்.