செய்தியாளர்களிடம் பேசிய தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, 2011 க்கு பிறகு உண்டியலில் வருகின்ற காணிக்கைகளை முறையாக அந்த திருக்கோவில் பதிவேட்டிலே பதியப்படவில்லை. அதற்கு முன்பு திருக்கோயில் வருகின்ற காணிக்கைகளை தெய்வத்திற்கு ஏற்ற நகைகளை வைத்து விட்டு, மற்ற நகைகளை உருக்கி திருக்கோவில் பயன்பாட்டிற்கும் அல்லது gold bar schemeக்கும் எடுத்து சென்றிருந்தார்கள்.
10 ஆண்டுகளில் அந்த பணி நடைபெறவில்லை என்பதால் தான் தற்போது மூட்டை மூட்டையாக பல திருக்கோவில்களில் இருக்கின்ற தங்கத்தை திருக்கோவில் உடைய வளர்ச்சிக்கு பயன்படுத்துவதற்கு உண்டான ஒரு உன்னதமான திட்டம். இதை மதி உள்ளவர்கள் அனைவரும் வரவேற்பார்கள், நல்ல மனதுடைய அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள்.
இதில் முறைகேடு ஏற்பட வாய்ப்பு உள்ளதா என செய்தியாளர் கேட்டதற்கு, சந்தேக கோடு அது சந்தோசக் கேடு என்பார்கள். நல்லவைகளை நினைப்போம், இனி நடப்பவைகள் நல்லவைகளாக அமையட்டும். நாங்கள் எல்லா காலங்களிலும் திறக்கப் போவதில்லை என்று அறிவிக்கவில்லை. இந்த நோய் தொற்றுக்காக எல்லா நாட்களிலும் கோவில் திறக்காமலும் இல்லை. வாரத்தில் மூன்று நாட்கள் அதிகமாக கூடுகிற நாட்கள், சனி ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் அதிகமாக பக்தர்கள் வருவார்கள் என்பதற்காக இந்த நடைமுறையை பின்பற்றி இருக்கின்றோம்.
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் தெளிவாக சொல்லி இருக்கிறார்கள். கொரோனா தொற்று 3ஆம் அலை நெருங்குகின்ற சூழ்நிலை இருக்கின்றது. ஒன்றிய அரசும் மக்கள் அதிகமாக கூடுகிற இடங்களை தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கின்றது. ஆகவே ஒன்றிய அரசின் வழிகாட்டுதலின்படி வெள்ளி, சனி, ஞாயிறுகளில் திருக்கோவில்கள் அடைக்கப்பட்டுள்ளது.
ஆனால் தெய்வங்களுக்கு நடக்க வேண்டிய ஒரு கால பூஜை, நான்கு கால பூஜை, ஆறுகால பூஜை தொய்வின்றி தினம் தோறும் நடந்து கொண்டிருக்கின்றது. பக்தர்களும் அவரது வசதிக்கு ஏற்றார் போல் மற்ற நான்கு நாட்களில் தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள்.