சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே சந்தைக்கு செல்லும் பொதுமக்கள் கட்டாயம் முககவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று வேகமெடுத்து பரவி வருகிறது. இதனால் அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மதகுப்பட்டி கல்லல் பகுதியில் வியாழக்கிழமையும், சொக்கநாத புரத்தில் செவ்வாய்க்கிழமையும், பாகனேரியில் புதன்கிழமையும் வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. இந்த சந்தைகளில் வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் காய்கறிகள் வாங்குவதற்காக பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வருவர். கொரோனா தொற்று சமீபகாலத்தில் குறைந்ததால் சந்தைக்கு கூட்டமாக வரும் பொதுமக்கள் பெரும்பாலோனோர் முக கவசம் அணியாமல் வருகின்றனர்.
மேலும் சமூக இடைவெளியையும் கடைபிடிப்பதில்லை. தற்போது கொரோனா மீண்டும் வேகம் எடுத்து பரவி வருகிறது. இந்த கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. அந்த வகையில் சந்தைக்கு வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மேலும் முகக்கவசம் கட்டாயம் அணிந்து வரவேண்டும் என்றும் சுகாதாரத்துறையினர் வலியுறுத்தி வருகின்றனர்.