சபரிமலை அய்யப்பன் கோவிலில் பிரசாதம் விரைவு தபால் மூலமாக பெற்றுக்கொள்வதற்கான ஆன்லைன் முன்பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் மண்டல மகர விளக்கு பூஜையின்போது ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். ஆனால் இந்த வருடம் கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக பக்தர்கள் செல்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்ய வேண்டும் எனவும், அதிலும் குறைவான எண்ணிக்கையில்தான் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் திருவிதாங்கூர் தேவஸ்தானம் மற்றும் தபால்துறை ஒன்றிணைந்து சபரிமலை ஐயப்பன் கோவில் பிரசாதத்தை தபால் மூலமாக பக்தர்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்கான ஒப்பந்தம் கேரள தேவஸ்தான துறை மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் முன்னிலையில் நேற்று கையெழுத்தானது. அதற்கான ஆன்லைன் முன்பதிவு மந்திரி நேற்று தொடங்கி வைத்துள்ளார்.
இதுபற்றி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சபரிமலை சாமி பிரசாதம் பெறுவதற்கான ஆன்லைன் முன்பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. இந்தியாவில் உள்ள எந்த ஒரு தபால் நிலையத்தில் இருந்தும் ஆன்லைன் மூலமாக பணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். அதில் அரவணை, நெய், குங்குமம், மஞ்சள், விபூதி மற்றும் அர்ச்சனை பிரசாதம் அடங்கிய பிரசாத பார்சல் ஒன்றின் விலை 450 ரூபாய். வருகின்ற நவம்பர் 16ஆம் தேதி முதல் பிரசாத பார்சல்கள் விரைவு தபால் மூலமாக முன்பதிவு செய்த பக்தர்கள் அனைவருக்கும் அனுப்பி வைக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.