Categories
தேசிய செய்திகள்

“சபரிமலையில் குழந்தைகளுக்கு தனி வரிசை”… சன்னிதான சிறப்பு போலீஸ் அதிகாரி தகவல்….!!!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த மாதம் 16-ஆம் தேதி மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு தினமும் பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா தொற்றால் 2 வருடங்களுக்கு பின் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதால் இந்த வருடம் சபரிமலையில் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக ஐயப்பனை தரிசனம் செய்ய ஒரு நாளைக்கு 90 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே முன்பதிவு செய்யலாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதே நேரம் உடனடி தரிசன பதிவு மூலமாக அதிகப்படியான பக்தர்கள் வருகின்றனர். அதனால் “இனி வருகின்ற நாட்களில் கூட்ட நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதால் 50 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தனி வரிசையை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக” சன்னிதான சிறப்பு போலீஸ் அதிகாரி கூறியுள்ளார்.

வருகிற 27-ஆம் தேதி மண்டல பூஜை நடைபெறுவதை முன்னிட்டு ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி  23-ம் தேதி ஆரன் முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது. இந்த ஊர்வலம் 26 -ஆம் தேதி மதியம் பம்பை கணபதி கோவிலுக்கு வந்து சேர்கிறது. அதன் பின் தலைசுமையாக தங்க அங்கி  சபரிமலைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இதனையடுத்து மாலை 6.30 மணிக்கு தங்க அங்கி அணிவித்து தீபாராதனை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதனால் அன்றைய தினம் மதியம் 1 மணிக்கு உச்ச பூஜைக்கு பின் 1:30 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது. இதை தொடர்ந்து பக்தர்கள் படி ஏற அனுமதிக்கப்படுவதில்லை. அதே போல மதியம் முதல் பம்பையில் இருந்து மலை ஏறவும் பக்தர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். இதனையடுத்து தீபாராதனைக்குப் பின் மாலையில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |