சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்ற தமிழக பக்தர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டால், மலையேற அவர் தடுத்து நிறுத்தப்பட்டார்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 7 மாதங்களுக்கு மேலாக பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்தது. ஆனால் ஊரடங்கு தளர்வுகள் தற்போது அறிவிக்கப்பட்டு வருவதால், சபரிமலையில் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஐப்பசி மாத பூஜையை முன்னிட்டு கடந்த 14ஆம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டு உள்ளது. அங்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக வரும் பக்தர்கள் அனைவரும் மருத்துவச் சான்றிதழுடன் வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.
மேலும் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்யும் பக்தர்களின் தினசரி 250 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. கொரோனா பாதிப்பு இல்லை என்று மருத்துவ சான்றிதழ் உடன் வரும் பக்தர்கள் அனைவருக்கும் கோவிலில் கொரோனா பரிசோதனை செய்து, 30 நிமிடத்தில் பரிசோதனை முடிவை வெளியிடப்படுகிறது. அதில் கொரோனா பாதிப்பு இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டவர்கள் மட்டுமே பம்பை வழியாக மலை ஏறுவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் நேற்று சபரி மலைக்கு வந்த பக்தர்களுக்கு கொரோனோ பரிசோதனை செய்யப்பட்டது. அதில் தமிழகத்திலிருந்து வந்திருந்த பக்தர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. அதனால் அவர் மலையேற அனுமதிக்கப்படாமல் தடுத்து நிறுத்தப்பட்டார். அங்கிருந்த அதிகாரிகள் அந்த நபரை கொரோனா முதல்நிலை சிகிச்சை மையத்திற்கு அனுப்பி வைத்தனர். அதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.