கேரளா மாநிலம் சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை வழிபாடு நடைபெற்று வருகிறது. இதனால் நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்ய செல்கின்றனர். அதனைத் தொடர்ந்து சபரிமலை யாத்திரைக்கு நடைபாதை, கார், பேருந்து மற்றும் ரயில் மூலம் பக்தர்கள் சென்று வருகின்றனர். பெரும்பாலனவர்கள் ரயில் மூலம் செல்வதால் ரயில்வே நிர்வாகம் கேரளாவுக்கு சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. அதன்படி ஆந்திராவின் காக்கிநாடாவில் இருந்து சேலம் வழியாக மேலும் ஒரு முன்பதிவு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காக்கிநாடா- எர்ணாகுளம் சிறப்பு ரயில் ஜனவரி 4 மற்றும் 12 ஆகிய 2 நாட்கள் இயக்கப்படுகிறது.
காக்கிநாடாவில் மாலை 5 மணிக்கு புறப்படும் இந்த ரயில் ராஜமுந்திரி, எழுவா, விஜயவாடா, நெல்லூர், குண்டூர், ரேணிகுண்டா, திருப்பதி, சித்தூர், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக சேலத்திற்கு அடுத்த நாள் காலை 7:52 மணிக்கு வருகிறது. அதன் பிறகு பின்னர் 3 நிமிடம் கழித்து புறப்பட்டு ஈரோடு, கோவை, பாலக்காடு, திருச்சூர் வழியாக எர்ணாகுளத்திற்க்கு பிற்பகல் 3.15 மணிக்கு சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் எர்ணாகுளம் டவுன் சிறப்பு ரயில் நாளை 5-ஆம் தேதி மற்றும் 12-ம் தேதி ஆகிய நாட்களில் திருச்சூர், பாலக்காடு, கோவை, சேலம் வழியாக காக்கிநாடாவுக்கு இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.