கொரோனா தொற்று பரவல் காரணமாக சபரிமலையில் கடந்த 2 வருடங்களாக எந்த வித முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது. ஆனால் இந்த ஆண்டு நோய்த்தொற்று கட்டுக்குள் வந்ததால் கோவிலில் பக்தர்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகள் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் எடுக்கப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளன. பின்னர் தினசரி அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஐயப்பனுக்கு பக்தர்கள் காலை 7 மணி முதல் மதியம் வரை நெய்யபிஷேகம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என கேரள தேவசம் அமைச்சர் ராதாகிருஷ்ணனின் அலுவலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதுமட்டுமன்றி சன்னிதானத்தில் தயாராக உள்ள பக்தர்களுக்கு 500 அறைகள் திறக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. ஒவ்வொரு அறைக்கும் ஒரு பக்தர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
இதுபோக வழக்கம்போல் தடுப்பூசி சான்றிதழ் உள்ளிட்ட covid-19 நெறிமுறைகளை பக்தர்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். ஒவ்வொரு அறையிலும் தூய்மைப்படுத்துதல் பணிகளை திருவாங்கூர் தேவசம் போர்டு கவனிக்க வேண்டும். அதுமட்டுமின்றி பக்தர்களுக்கு இடையே ஒமைக்ரான் வைரஸ் பரவல் கண்டறியப்பட்டால், எல்லாத் தளர்வுகளும் மீண்டும் திரும்பப் பெறப்படும் என்று கேரள அரசு தெளிவாக அறிவித்துள்ளது.