கேரளாவிலுள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை விழாவானது நடைபெற்று வருகிறது. இதற்கென சென்ற 16-ஆம் தேதி கோயில் நடை திறக்கப்பட்டது. இதையடுத்து 17-ஆம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். இந்த முறை கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் கோயிலுக்கு வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டி வருகின்றனர்.
இதனால் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தேவசம்போர்டு செய்து வருகிறது. இந்நிலையில், சபரிமலையில் பாதுகாப்பு பணியிலிருந்த 5 காவல்துறையினருக்கு சின்னம்மை பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதன் காரணமாக சபரிமலை வரும் பக்தர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் உள்ள காவல்துறையினர் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும் என கேரள சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்து இருக்கிறது.