சபரிமலை அய்யப்பன் கோவில் வரும் பக்தர்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கொண்டுவர வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நடை திறக்கப்படாமல் இருந்தது. அதன் பிறகு சற்று கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் நடை திறக்கப்பட்டது. அப்போதிலிருந்து வழக்கமான பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பக்தர்கள் குறைந்த அளவு மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தனர். அதன்பிறகு பல்வேறு கோரிக்கைகள் இருந்ததால், தினமும் 5 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் மக்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி சாமி தரிசனம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் பல மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் கடந்த மாதம் சபரிமலை ஐயப்பன் நடை மூடப்பட்டது. தற்போது வருகின்ற 28 ஆம் தேதி உத்திர திருநாளை முன்னிட்டு நடை திறக்கப்பட்டிருக்கும். அப்போது சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அனைவரும் கொரோனா நெகட்டிவ் என்ற சான்றிதழை கட்டாயம் கொண்டு வர வேண்டும் என தேவஸ்தான போர்டு அறிவித்துள்ளது.