கரூர் மாவட்டத்தில் உள்ள தாந்தோணிமலை பகுதியில் சுரேந்தர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கார் டிரைவராக இருக்கிறார். கடந்த 13-ஆம் தேதி செல்போன் மூலம் சுரேந்தரை தொடர்பு கொண்ட நபர் தன்னை தாம்பரம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் வேலை பார்க்கும் சப்-இன்ஸ்பெக்டர் என அறிமுகப்படுத்தி கொண்டார். இதனையடுத்து உங்களது செல்போன் எண் ஆபாச படம் பிடிக்கும் whatsapp குரூப்பில் இணைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைக்கு நீங்கள் சென்னைக்கு வராவிட்டால் கரூர் போலீசாரை வைத்து கைது செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். மேலும் அபராத தொகையை கட்டி பிரச்சனையை முடித்து கொள்ளவில்லை என்றால் வீட்டிற்கு வந்து அவமானப்படுத்தி விடுவோம் என அந்த நபர் மிரட்டியுள்ளார்.
இதனால் அச்சத்தில் அவர் கேட்ட 5 ஆயிரம் ரூபாய் பணத்தை சுரேந்தர் அனுப்பி வைத்துள்ளார். அதன் பிறகும் அந்த நபர் தொடர்ந்து போன் செய்து மிரட்டியதால் தனது செல்போனில் இருக்கும் ட்ரூ காலரில் சென்று, சுரேந்தர் அந்த எண்ணை அழைத்து பார்த்த போது ஸ்பாம் பெயரில் ரிப்போர்ட் ஆகியது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சுரேந்தர் உடனடியாக கரூர் சைபர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் தனிப்படை போலீசார் கோவை மாவட்டம் வடவள்ளியில் பதுங்கியிருந்த மாதவன், ஜான் பீட்டர், கௌதம், சந்தன சொர்ண குமார் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். இவர்கள் ஈரோடு, கோவை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் இதே போன்று குற்ற சம்பவத்தில் ஈடுபட்டு சிறை சென்று வந்தது குறிப்பிடத்தக்கதாகும்.