சப் இன்ஸ்பெக்டர் மீது பாலியல் குற்றம் சுமத்திய இளம்பெண் ஒருவர் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குமரி மாவட்டம் பளுகல் போலீஸ் சரகத்துக்குட்பட்ட 31 வயது பெண், தனது குடும்ப பிரச்சனை காரணமாக ஏற்கனவே அப்பகுதியில் இருந்த காவல் நிலையத்தில் புகார் கொடுக்க சென்றுள்ளார். அப்போது, காவல் நிலையத்தில் பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டருக்கும், இளம்பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதில், அந்த பெண் கர்ப்பமானதாகவும், சப்-இன்ஸ்பெக்டர், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கருவை கலைக்க சொன்னதாகவும் கூறப்படுகிறது. இது பற்றி அந்த பெண், மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் இரண்டிலும் புகார் கொடுத்துள்ளார். இதனை அடுத்து பாலியல் குற்றச்சாட்டுக்கு உட்படுத்தப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் சுசீந்திரம் பகுதி காவல் நிலையத்துக்கு மாற்றம் செய்யப்பட்டார். காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வந்த பெண்ணை ஏமாற்றி அவரிடம் சப்-இன்ஸ்பெக்டர் ஒழுக்கம் இல்லாமல் நடந்து கொண்ட சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.
இதனிடையே மார்த்தாண்டம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வரும் அந்த பெண், சப்-இன்ஸ்பெக்டர் மீது பாலியல் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்ய கோரி வலியுறுத்தி வந்த நிலையில் அவருக்கு ஆதரவாக மாதர் சங்கத்தினர் சார்பில் போராட்டங்களும் நடத்தப்பட்டன. இருந்தும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால், இளம்பெண் கடந்த சில நாட்களாகவே மனமுடைந்த நிலையில் இருந்து வந்துள்ளார். இதனால் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த அந்த இளம்பெண் அளவுக்கு மீறி தூக்க மாத்திரையை சாப்பிட்டதால் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அப்போது அங்கு சென்று பார்த்த மாதர் சங்கத்தினர் அதிர்ச்சி அடைந்து உடனே அவரை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக மார்த்தாண்டம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். சப்-இன்ஸ்பெக்டர் மீது பாலியல் புகார் கூறிய பெண் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.