கோவில்களில் சமஸ்கிருத பெயர்களுடன் தமிழ் பெயர்களும் சேர்த்து இடம்பெற முதலமைச்சருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை புரசைவாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் மத்திய அரசின் வழிகாட்டுதல்படியே வெள்ளி, சனி, ஞாயிறுகளில் மூடப்பட்டுள்ளதாகவும், கொரோனா தொற்று முழுமையாக குறைந்த பிறகு கோவில் திறப்பு முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார் எனவும் தெரிவித்தார்.
சில கோவில்களுக்கு தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழிகளில் பெயர்கள் உள்ளதாகவும், அனுமதியுடன் இரண்டு பெயர்களிலும் கோவில் பெயர்களை அழைக்க முதலமைச்சருடன் தீவிர ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார். பாஜகவினர் போராடுவதற்கு காரணம் தேடுகிறார்கள் என குற்றஞ்சாட்டிய அவர், கோவில் பூசாரிகளுக்கு ஊக்கத்தொகை சரிவர கிடைப்பது உறுதிப்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டார்.
அதில் அவர், “போராடுவதற்கான வலுவான காரணங்கள் எதுவும் இல்லாததால் இப்படிப்பட்ட போராட்டத்திற்கு அவர்களாகவே அவர்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றார்கள். இந்து சமயம் துறையைப் பொறுத்த அளவில் மத்திய அரசுடைய வழிகாட்டுதல் படிதான் இந்த கொரோனா நோய் தொற்று தளர்வுகளை நாம் நடைமுறைப்படுத்தி கொண்டிருக்கின்றோம். கொரோனா நோய் தொற்று அபாயம் நம்மை விட்டு நீங்கியவுடன் நிச்சயமாக முதலமைச்சர் அவர்கள் திருக்கோயிலை திறப்பதற்கு முதல் பணியாக அந்த பணியை மேற்கொள்வார் என்ற உறுதியை நாம் அளிக்கின்றோம்” என்று கூறியுள்ளார்.