சமாதான பேச்சுவார்த்தைகள் மூலமாக போருக்கு முடிவு கட்டுதல் அவசியம் என போப் ஆண்டவர் தெரிவித்துள்ளார்.
பக்ரைன் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் போப் ஆண்டவர் பிரான்சிஸ் நேற்று தலைநகர் மணமாவில் அந்த நாட்டின் மன்னர் ஹமத் பின் இசா அல் கலீபாவில் ஏற்பாட்டில் நடைபெற்ற சர்வமத உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு பேசியுள்ளார். மேலும் இந்த மாநாட்டில் முன்னணி முஸ்லிம் இமாம்கள் உலகின் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்களின் தலைவர் மற்றும் நீண்ட காலமாக மதங்களுக்கு இடையேயான உரையாடலில் ஈடுபட்டு இருக்கின்ற அமெரிக்க மத குருமார்கள் போன்றோர் பங்கேற்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து போப் ஆண்டவர் பேசிய போது உலகம் இரண்டு எதிர் கடல்களைப் போல பிரிந்து சென்று கொண்டிருப்பதாக தோன்றினாலும் மத தலைவர்கள் ஒன்றாக இருப்பது அவர்கள் மோதலுக்கு பதிலாக சந்திப்பதற்கான பாதையை தேர்ந்தெடுத்து ஒரே நீரில் பயணம் செய்ய விரும்புகின்றார்கள் என்பதற்கு சான்றாக இருக்கிறது. மேலும் உலகின் சிறந்த மதங்கள் அமைதிக்காக சேர்ந்து செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து உக்ரைன் போர் பற்றி பேசிய அவர் நாம் குழந்தைத்தனமான காட்சியை பார்க்கின்றோம்.
மனித குலத்தின் தோட்டத்தில் நமது சுற்றுப்புறங்களை வளர்ப்பதற்கு பதிலாக நெருப்பு ஏவுகணைகள் மற்றும் வெடிகுண்டு போன்ற சோகத்தையும் மரணத்தையும் தரக்கூடிய ஆயுதங்களுடன் விளையாடி கொண்டிருக்கிறோம். நமது பொதுவான வீட்டை சாம்பல் மற்றும் வெறுப்பால் மூடுகின்றோம். மேலும் சமாதான பேச்சுவார்த்தைகள் மூலமாக உக்ரைனில் ரஷ்யாவின் போருக்கு முடிவு கட்டுதல் என்பது அவசியமாகும் என தெரிவித்துள்ளார்.